டிராக்டரில் நான் சோஃபாவில் அமர்ந்ததாக விமர்சிப்பவர்கள் பிரதமரின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களுக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்கள் ட்ராக்டர் பேரணி மேற்கொண்டார் ராகுல் காந்தி. இதில் டிராக்டரில் சோபாவை போட்டு ராகுல் காந்தி அமர்ந்து சென்றதை மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி உள்ளிட்ட பாஜகவினர் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்நிலையில்,
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "என் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர், டிராக்டரில் சோஃபாவை போட்டுள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக மக்கள் வரிப்பணம் ரூ.8 ஆயிரம் கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமின்றி, பிரதமரின் வசதிக்காக சொகுசு படுக்கைகளே உள்ளன. அதையெல்லாம் ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.