உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டும் ராமர் கோவில் கட்டப்பட்டு, அதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 22ம் தேதி திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவிற்காக, கோயில் அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பிற்கு நாடு முழுவதும், ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுப்பை அறிவித்தது ஒன்றிய அரசு. அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், ராமர் கோவில் திறப்பு நாளான ஜனவரி 22 ஆம் தேதி அன்று குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இப்படியான ஏற்பாடுகளுடன், ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோயில் திறப்பு விழா நடைபெற்றது. ராமர் கோயில் திறப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒரு இடத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதாகவும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த ஃபர்சானா எனும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி வந்து அவர் ஃபிரோசாபாத் மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 22ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பொறுப்பாளர் மருத்துவர் நவீன் ஜெயின், “குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் திறப்பு அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு, அவரின் பாட்டி ஹுஸ்னா பானு, ‘ராம் ரஹிம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார். இது குறித்து ஹுஸ்னா பானு தெரிவிக்கையில், “இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கவே இந்தப் பெயரை சூட்டினேன்” எனத் தெரிவித்துள்ளார்.