கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 50 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் 044-25330952, 044-25330953, 25354771 என்கிற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 350க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் மேலும் அதிர்ச்சி தரும் சம்பவமாக தடம் புரண்ட சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதை போல் டெல்லியில் இருந்து புனே சென்று கொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர் விபத்துகள் காரணமாக ஒரிசா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.