மத்திய அரசு கரோனா வைரஸை கையாண்ட விதம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் மத்திய அரசு கரோனா வைரஸை கையாண்ட விதம் குறித்து கிண்டல் செய்யும் விதமாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி. 2020 - 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி மைனஸ் 10.3 சதவீதம் வரை குறையலாம் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பை மேற்கோள்காட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பா.ஜ.க அரசாங்கத்தின் மற்றொரு உறுதியான சாதனை. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இந்தியாவை விட கரோனாவை சிறப்பாகக் கையாண்டன" என்று விமர்சித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புப்படி, இந்த நிதியாண்டின் இறுதியில், பாகிஸ்தானின் ஜி.டி.பி மைனஸ் 0.4 சதவீதமும், ஆப்கானிஸ்தானின் ஜி.டி.பி மைனஸ் 5 சதவீதம் வரை மட்டுமே வீழ்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.