இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் பஞ்சாப் மாநிலத்திலும், கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அரசு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் என அனைத்து கல்வி நிலையங்களையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் ஜனவரி 15 ஆம் தேதி வரை, இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பார்கள், சினிமா அரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், மால்கள், உணவகங்கள், ஸ்பாக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ள பஞ்சாப் அரசு, இந்த கட்டுப்பாடுகள் வரும் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் பெருங்கூட்டம் கூடும் நிலையில், அவற்றுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.