கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 15-ல் காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான தி.மு.க 2 இடங்களிலும், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் என மொத்தம் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு, ஜுுன் மாதம் 06- ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது.
இந்நிலையில், கடந்த வருடம் பாகூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசின் மீதிருந்த நம்பிக்கையின்மை காரணமாக, கடந்த மாதம் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களில் ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ண ராவ், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், தற்போது காங்கிரஸ் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. அதேசமயம் எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 7, அ.தி.மு.க உறுப்பினர்கள் 4, பா.ஜ.க நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3, என மொத்தம் 14 பேர் உள்ளனர்.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒரே அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் 14 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு துணைநிலை ஆளுநரிடம், 'காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க' வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியை இன்று (18/02/2021) அழைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உடனடியாக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் "ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோன்று எதிர்க்கட்சிகளுக்கும் 14 உறுப்பினர் உள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசானது வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிரடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டதால் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.