புதுச்சேரி அமைச்சக உதவியாளர்கள் நேரடி பணி நியமனத்தைக் கைவிட வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி இளைஞர்களுக்கான அமைச்சக பணிக்கான எதிர்கால வேலை வாய்ப்பினை பறிக்கும் வகையில் நிரப்பப்பட உள்ள அமைச்சக உதவியாளர் நேரடி நியமனத்தை நிறுத்தக் கூறியும், நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தினால் புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என வலியுறுத்தியும் அமைச்சக உதவியாளர் பணியை முதுநிலை எழுத்தர் பதவியிலிருந்து பணி மூப்பு அடிப்படையில் இதுவரை நிரப்பியது போலவே நிரப்பக் கோரியும் புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முதுநிலை எழுத்தர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதுவை முதல்வர் ரங்கசாமி, சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சக உதவியாளர் பதவிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவித்தார். இந்த நேரடி நியமனத்தை அமல்படுத்தக்கூடாது. நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்தால் அகில இந்திய அளவில் தேர்வும் நியமனமும் நடைபெறும். இதனால் பிற மாநிலத்தவர், குறிப்பாக வட இந்தியர்கள் புதுவை இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கும் அவல நிலை ஏற்படும்.
எனவே முதலமைச்சர் ரங்கசாமி இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் செயல்பட்டு நேரடி நியமனத்தை புதுச்சேரியில் அனுமதிக்கக்கூடாது. அமைச்சக உதவியாளர் பதவிகளை முழுமையாகப் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.