புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 16-ஆம் தேதி முதல் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்ததைக் கண்டிக்கும் வகையில் இன்று கல்லூரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து நேரடி தேர்வு நடத்தக்கூடாது என்றும் ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் மாணவ மாணவிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி முடிவு செய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.