புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.
சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழுவே இனிமேல் இந்த வழக்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். புகாரளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குழந்தையை மீட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
படு சுட்டியான அந்தச் சிறுமி சோலை நகர் பகுதி மக்கள் அனைவருக்கும் செல்லக் குழந்தையாக இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் விளையாடச் செல்வாராம். அந்த அளவிற்கு அந்த பகுதி மக்கள் குழந்தையிடம் பழகி வந்துள்ளனர். மேலும் சிறுமியின் பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதால் அந்த பகுதி மக்கள் அந்த குழந்தைக்கு சில உதவிகளையும் செய்து வந்தனர். இந்தநிலையில் அச்சிறுமியின் கொலை சம்பவம் அந்த பகுதி மட்டுமல்லாது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது. எந்தவித அழைப்புகளும் இல்லாமலேயே தற்பொழுது அங்கு ஆயிரக் கணக்கிற்கும் மேலான பொதுமக்கள் ஒன்று கூடி கண்ணீருடன் நடந்து வருகின்றனர்.