புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அதனால் காலியாக இருந்த துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று தினம் நாள் பகல் 12 மணி வரை காலக்கெடு அளித்து இருந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை சபாநாயகர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் பாலனை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி துணை சபாநாயகராக பாலன் தேர்வு செய்யப்பட்டதாக பேரவையில் சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார்.
இதனை தொடர்ந்து துணை சபாநாயகராக பாலன் பேரவையில் பதவியேற்றுக்கொண்டார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் துணை சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்ட பாலனை இருக்கையில் அமர வைத்தனர். அதனை தொடர்ந்து பாலனுக்கு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.