புதுச்சேரி மாநிலத்துக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் இளைஞர்கள், அதிக அளவில் வருகிறார்கள். இவர்கள் சுற்றுலா தளங்களைச் சுற்றி வருகின்ற, அதேசமயம் மது வகைகளைக் குழு குழுவாக வாங்கி குடித்துக் கொண்டாடுகின்றனர். வார இறுதி நாட்களில் சுற்றுலாவாசிகள் புதுச்சேரிக்கு வருவதற்கு விதவிதமான வெளிநாட்டு மதுபான வகைகள் தான் காரணம் என பேசப்படுகிறது. இதன்மூலம் சுற்றுலாதுறைக்கும், புதுவை அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.
அவ்வப்போது புதுப்புது ரகங்களில், வெவ்வேறு சுவையுடன் கூடிய பீர், விஸ்கி, பிராந்தி போன்ற மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்படுவது உண்டு. பலவிதமான மது வகைகள் விற்பனை செய்யப்பட்டாலும் புதுச்சேரி பீருக்கு குடி பிரியர்களிடையே எப்போதும் தனி மவுசு உண்டு. இது 650 மி.லி பாட்டில் பீர்., டின் பீர், மக் பீர் என பலவிதமாக விற்கப்பட்டு வருகிறது. இதில் மக் பீர் ரகம் கிடைப்பதில்லை என்பதால் மது பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது லெகர், ஸ்ட்ராங்க் ஆகிய ரகங்களில் 5 லிட்டர் பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் லெகர் ரூ.1,850, ஸ்ட்ராங்க் ரூ.1,950 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரியில் ஒரு சில மது கடைகளில் மட்டுமே இந்த 5 லிட்டர் பீர் விற்பனைக்கு வந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் 5 லிட்டர் பீர் விற்பனை செய்யும் கடைகளை தேடிச் சென்று அதனை வாங்கி குடித்து மகிழ்கின்றனர். நண்பர்கள் குழுவாக குடிப்பதற்கு இந்த மக் பீர் பயன்படும் என்பதால் குடி பிரியர்கள் ,மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் புதுச்சேரியில் பல சிறப்பம்சங்கள், பாரம்பரிய சுற்றுலா தளங்கள் இருக்க புதுச்சேரி என்றாலே மதுவின் மயக்கம்தான் என பொருள்படும் படி அடையாளப்படுத்தப்படுவதும், அதற்கு அரசும் முக்கியத்துவம் அளிப்பதும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.