மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநரின் உரையின்றி கூடியது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையுடன் சட்டப்பேரவை கூடுவது வழக்கம். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் உரையின்றி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, தனது ஆட்சிக் காலத்தில் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அம்மாநிலத்தின் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கொல்கத்தா காவல்துறையில் 'நேதாஜி' என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.