ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து தான் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்' என அவருடைய ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரத்தை ராகுல் காந்தி மாற்றி இருந்தார். மேலும் மக்களவைச் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து அங்கிருந்து வெளியேறிய ராகுல் காந்தி அவருடைய தாயார் சோனியா காந்தி வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேருக்கு பதவி உயர்வு வழங்க அரசு பரிந்துரைத்திருந்தது. அதனை குஜராத் உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருந்தது. 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு அரசு கொடுத்த பரிந்துரைக்கு எதிராகவும், அதற்கு ஒப்புதல் அளித்த உயர்நீதிமன்றத்திற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த 68 பேரில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதியும் அடங்குவார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ப்ரோமோஷன் என்பது பரிந்துரை மூலமாக வரக்கூடாது. கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வுக்கு என சில வழிமுறைகள் உள்ளது. அந்த வழிமுறைகள் பின்பற்றப்படாததால் பதவி உயர்வை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.