
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலத் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படுவதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன.
இந்தநிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் முகமான அவருடைய இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் சட்ட மேலவை இருப்பதால், சட்டமன்றத் தேர்தலில் நிற்காமல் முதல்வராகலாம் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், உத்தரப்பிரதேச விவசாயிகளின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரிய லோக் தளம் என்ற கட்சியுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அகிலேஷ் யாதவ், தனது மாமா சிவபால் யாதவின் கட்சியோடு கூட்டணி வைப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.