கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் கடந்த ஜூன் 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என்று பெயரிடப்பட்டு அதற்கான அடையாள அட்டையை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தங்களது 28 கோரிக்கைகளை அரசுப் போக்குவரத்துத் துறை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் ஸ்ட்ரைக் நடத்த கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து, தனியார் போக்குவரத்து ஊழியர்கள் இந்த சக்தி திட்டத்தால் தாங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறினர்.
அதற்கு முன்னதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த ஜூலை 24 அன்று மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் செயலி அடிப்படையிலான திரட்டிகளை மொத்தமாக தடை செய்ய வேண்டும், ஒவ்வொரு ஓட்டுநருக்கும் ரூ.10,000 நிதியுதவி வழங்க வேண்டும், குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தனியார் போக்குவரத்து சங்கங்களின் 30 கோரிக்கைகளில் 28 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். மேலும், இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவருடன் விவாதிப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், இதற்கு மாநில அரசு எந்தவித பதிலும் அளிக்காததால் செப்டம்பர் 11ஆம் தேதி அதாவது இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தனியார் போக்குவரத்து சங்கங்கள் முடிவு செய்துள்ளன.