ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. மெகபூபா முப்தி மாநிலத்தின் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முதல்வர் முப்தி பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி பா.ஜ.க தான் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழ்ந்ததால், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பின்னர் சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. தொடர் குழப்பங்கள் காரணமாக கடந்த மாதம் சட்டசபையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார். ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்து ஆறு மாத காலம் ஆகியும் குழப்பம் முடிவுக்கு வராததால் நேற்று நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1996 ல் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடந்தது. தற்பொழுது மீண்டும் 22 ஆண்டுகளுக்கு பின் அங்கு இதுபோல நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.