இந்தியாவின் 75- வது சுதந்திர தினம் நாளை (15/08/2021) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி இன்று (14/08/2021) இரவு 07.00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், "கரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை; இரண்டாம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பால் கரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆவதால், இந்த ஆண்டு சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களில் ககன்யான் திட்டம் முக்கியமானது. எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது" என்று கூறினார்.