
விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து அவர்களுக்கு உயரிய பதக்கம் வழங்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறும். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கும் இந்த போட்டியில், உலகளவில் இருக்கும் வீரர்கள் கலந்து கொண்டு பதக்கம் வென்று தங்களது நாட்டுக்கு பெருமை சேர்பார்கள். இந்த ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக் போட்டியில், வெள்ளி மற்றும் வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.
சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கிரிக்கெட், பேஸ்பால், ஷாப்ட்பால், பிளாக் புட்பால் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டு போட்டிகளை சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 வடிவத்தில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டியில், ஆடவர் பிரிவில் மொத்தம் 90 வீரர்களும், பெண்கள் பிரிவில் மொத்தம் 90 வீரர்களும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம் பெறுவார்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே என 12 நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக உள்ளன.

ஒலிம்பிக் போட்டியில் கடைசியாக கிரிக்கெட் விளையாட்டு 1900இல் விளையாடப்பட்டது. , பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மட்டுமே விளையாடிய இந்த போட்டியில், பிரான்ஸ் தோற்கடிக்கப்பட்டது. 1904 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் போதுமான பங்கேற்பாளர்கள் கிடைக்காததால் அது ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், 128 ஆண்டுகளுக்கு பிறகு 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு சேர்த்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.