கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கிராம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் 108 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்து, அதில் அனுமன் கொடி ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, எந்த மத, அரசியல் கொடியையும் ஏற்றக்கூடாது என்று கூறி கிராமப் பஞ்சாயத்து அந்த கோரிக்கை நிராகரித்தது.
இருப்பினும், அந்த கிராம மக்கள் சிலரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து, அந்த அரசு நிலத்தில் கொடிக் கம்பம் அமைத்து அதில் அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதையறிந்த, மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் அனுமன் கொடியை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று (28-01-24) அந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும், போராட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதன் பின்னர், அங்கு இருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். இதற்கு இந்து அமைப்பினரும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது தற்செயலாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே விதிகளை மீறி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் தான். கர்நாடகா மக்களை மாநில அரசுக்கு எதிராகத் திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.