வருகின்ற 16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
கரோனா தடுப்பூசி செலுத்துவதில், முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுது கொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்குறித்த அனைத்து அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய பிரதமர் மோடி, கரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.