புதுச்சேரியில் கஞ்சா, போதைப் பொருள்களின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த, காவல்துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூலம் என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வில்லியனூா் கணுவாப்பேட்டை அரசுப் பள்ளி எதிரே, 3 போ் கஞ்சா பொட்டலங்களைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கிருந்த 3 பேரைப் பிடித்ததுடன், அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில், அவா்கள் கோட்டைமேடு வினோத்குமாா், பங்கூரைச் சோ்ந்த சதீஷ்குமாா், செம்பியபாளையத்தைச் சோ்ந்த தசரதன் என்பது தெரியவந்தது.
மேலும் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பாண்டிச்சேரி மேற்கு எஸ்பி கூறுகையில், " இரண்டு மாதங்களாகவே முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்து வந்தோம். ஆப்ரேஷன் திரிசூலத்திற்காக இந்தக் கண்காணிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், முன்னாள் குற்றவாளிகளான வினோத், சதீஷ் ஆகிய இருவரும் சமீபத்தில் ஓடிஸா சென்றதாக தகவல் கிடைத்தது. இதை விசாரித்தபோது, பொருள் வாங்கச் சென்றதாக கூறப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை ட்ராக் செய்து பார்த்தோம். அப்போது, பாண்டிச்சேரி வந்தவர்களை சோதித்தபோது, இரண்டு கிலோ கஞ்சா சிக்கியது. பின்னர், அவர்மூலமாக தசரதன் என்பவரை பிடித்து சோதனை செய்ததில் ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது.
இதில், சதீஷ் என்பவர் பல முக்கிய குர்த்வாளிகளுடன் தொடர்பில் இருப்பதால் காலாப்பெட்டை ஸ்டேஷனில் இருந்த நிதியனாந்தம், ராஜா உள்ளிட்ட மூன்று பேர் இந்தக் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், டவர் லொகேஷன் உள்ளிட்டவற்றை சோதித்தபோது, எல்லாமே அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்தது. முன்னதாக, அட்டெம்ப்ட் மர்டர் கேசில் உள்ளே போன சதீஷுக்கு, ஏற்கெனவே கொலை வழக்கில் உள்ளே இருந்த நித்தியானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், உள்ளே இருந்த நித்தியானந்தத்திற்கு தேவையானவற்றை, வெளியே வந்த பிறகு சதீஷ் செய்துவந்துள்ளார். இப்படித்தான், கஞ்சா வேலையும் நடந்துள்ளது. ஓடிஷாவில் கஞ்சா ஏஜன்சி இருக்கிறது. அங்கிருந்துதான் இவர்கள் பாண்டிச்சேரிக்கு வாங்கிவந்து விற்றுள்ளனர். நித்தியானந்தம், ராஜா, சதீஷ் மேலும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று பேர் ஏற்கெனவே ஜெயிலில் இருக்கிறார்கள். இன்னும் வழக்குத் தொடர்பான இருவரை தேடி வருகிறோம். இவர்களின் டார்கெட் கல்லூரி மாணவர்கள்தான். இரண்டு மாசமா ஸ்கெட்ச் போட்டு காத்திருந்தோம். அதனால்தான், இந்த நெட்வொர்க் சிக்கியது என்றார் பாண்டிச்சேரி மேற்கு எஸ்பி. இந்தச் சம்பவம் பாண்டிச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.