புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று (10/02/2022) காலை 10.00 மணிக்கு ராஜ்நிவாஸில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரியில் உள்ள பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வது குறித்தும், பள்ளியில் சத்தான உணவுகளை மதிய உணவில் சேர்ப்பது குறித்தும் அமைச்சருடன் ஆளுநர் ஆலோசனை செய்தார்.
பின்னர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளைக் கணினி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு, மதிய உணவில் நவ தானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை மதிய உணவுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்து ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன்.
புதிய கல்விக்கொள்கைகளின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவதோடு அதைக் கண்காணிப்பதும் வலியுறுத்தப்படுகிறது.
வருகின்ற 2023- ஆம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது. அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.