
இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை அறியாதவர்கள் சிலரே. டென்னிஸ் விளையாட்டைப் பற்றி தெரியாதவர்களையும், தனது விளையாட்டின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிறகு, சானியா மிர்சாவுக்குத் தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வளித்தார்.
சானியா மிர்சாவை தொடர்ந்து, அவரின் தங்கையான அனம் மிர்சாவும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணமுடித்தார். இந்த நிலையில், அனம் மிர்சா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை ஒட்டி, இஸ்லாமிய மக்கள் கடந்த 1 மாத காலமாக நோன்பு இருந்து இறைவனை வழங்கி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை வர இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், பல இடங்களில் கண்காட்சிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அனம் மிர்சா ஹைதராபாத் உள்ள கிங்ஸ் பேலஸில் ரம்ஜான் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில், இரண்டு கடைகாரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில், வாசனை திரவியங்கள் வாங்க வந்த ஒருவருக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட் சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.