இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று (07/06/2021) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. தடுப்பூசித் தயாரிப்பதற்கு முன்பே முன்களப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றினர். இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். தேவையான தடுப்பூசிகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் தற்போது நிலவும் தடுப்பூசிப் பற்றாக்குறை விரைவில் முடிவுக்கு வரும். வெளிநாடுகளில் இருந்தும் கரோனா தடுப்பூசிகளை வாங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
நாட்டில் தற்போது 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் மூன்று நிறைவடையும் நிலையில் உள்ளன. தடுப்பூசித் தயாரிப்பில் மாநிலங்களுக்கான விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது; அதன்படியே செயல்படுகிறோம். தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிக் கொள்கைகளில் அவ்வப்போது மாற்றம் செய்கிறோம். மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதி வரை மத்திய அரசு மட்டுமே தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது.
கரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். கரோனா தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காகச் செலவு செய்யத் தேவையில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதத்தைத் தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்குச் செலுத்தலாம். மீதமுள்ள 75% தடுப்பூசிகளை மத்திய அரசே விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21- ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும். ஜூன் 21- ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வருகிறது. தீபாவளி வரை ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் விநியோகிக்கப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும். நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்திப் பரப்ப வேண்டாம். கரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால் கரோனா இல்லை என்று இருந்துவிடக் கூடாது. பொது முடக்கத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது." இவ்வாறு பிரதமர் கூறினார்.