டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார். மேலும், குத்துச்சண்டையில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தநிலையில், இன்று (05.08.2021) நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஜெர்மனியை 5 - 4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. 41 வருடங்களுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் வெல்லும் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியையொட்டி இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்குத் தலா ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றவர்களில் கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங் ஆகிய எட்டு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.