
பேருந்தில் 22 வயது இளம்பெண் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், சில்சார் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர், அரசு வேலைக்காக படித்து வருகிறார். இந்த பெண், இன்று மதியம் பதர்பூர் பகுதியில் இருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் பயணித்துள்ளார். அந்த பேருந்தில் வேறு யாரும் இல்லாத நிலையில், இரண்டு ஆண்கள் மட்டும் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதை அந்த பெண் எதிர்த்தபோது, அவர்கள் அவரை அடிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை அறைந்து குத்தி கொடூரமாக உதைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மேல், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அந்த பெண்ணை, சார்கோலா அருகே சாலையோரத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.