மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்குப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இறுதிக்கட்ட தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஒருவர் (பிரதமர் மோடி) கடவுள்களின் கடவுள் என்கிறார். ஒரு தலைவர் ஜெகன்நாதர் அவரது பக்தர் என்கிறார். அவர் கடவுள் என்றால் கடவுள் அரசியல் செய்யக் கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக்கூடாது.
அவருக்கு கோவில் கட்டி வழிபடுவோம். அவர் விரும்பினால் பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். என்னை மிகவும் நேசித்த அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பல பிரதமர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், தேவகவுடா ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், இவரைப் போல் யாரையும் பார்த்ததில்லை, இப்படி ஒரு பிரதமர் நமக்கு தேவை இல்லை” என்று கூறினார்.