திருநங்கைகளுக்கு உதவி மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில் ஆறு திருநங்கைகள் இணைந்து திருநங்கைகளுக்கான உதவி மையத்தை மும்பையில் நிறுவியுள்ளனர்.
சோபி தாவூத் எனும் 24 வயது திருநங்கை தன் ஐந்து நண்பர்களுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ட்ரான்ஸ் ஜென்டர்.காம் என்ற தளத்தை தொடங்கி, திருநங்கைகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சட்ட ஆலோசனைகளை இந்த தளத்தின் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் செய்துள்ளனர்.
இதுகுறித்து சோபி, "திருநங்கைகள் இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் எங்களை இப்படி ஒதுக்கிப் பார்த்தால் நாங்கள் எங்கே செல்வது என்று உண்மையில் தெரியவில்லை. மக்கள் எங்களை பார்த்து பேசுவதற்கு கூட பயப்படுகிறார்கள். அதனால்தான் பல திருநங்கைகள் இந்த சமூகத்திலிருந்து வெளியே இருக்கிறார்கள். இதனையெல்லாம் பார்த்துதான் நாங்கள் இந்த தளத்தை ஆரம்பித்துள்ளோம். இதில் திருநங்கைகள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பாலின மாறுபாட்டிற்கான அறுவை சிகிச்சை குறித்து வழிகாட்டுதல் மற்றும் சட்ட ஆலோசனைகள் மற்றும் ஆவணங்களில் பெயர்கள், பாலினத்தை மாற்றுதல் போன்ற உதவிகளை பெறலாம். இங்குள்ள திருநங்கைகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள திருநங்கைகளும் இந்த உதவிமையத்தையும், தளத்தையும் நாடலாம் என்று சோபி கூறினார்.