உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் ஏழை பாழைகள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள். தினக்கூலி வேலைக்குச் செல்பவர்கள் வேலையில்லாமல் என்ன செய்வது என்று புரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
பெற்றோர்களின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகிறது. அதுவும் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்ஃபோன் தேவைப்படுவதால் பிள்ளைகளுக்கு ஃபோன் வாங்கி கொடுக்க பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் என்பவர் மூன்றாவது மற்றும் ஐந்தாவது படிக்கும் தன்னுடைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்கு பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுக்க சொல்லியுள்ளது. குடும்ப நிலை அதற்கு ஒத்துவராத காரணத்தால் என்ன செய்வது என்று யோசித்த குல்தீப், குழந்தைகளுக்காக தான் ஆசையாக வளர்த்த மாட்டை 6,000 ரூபாய்க்கு விற்று குழந்தைகளுக்கு ஃபோன் வாங்கி கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. பலர் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் வருகிறார்கள்.