
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று தலைமைக் காவலர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.04.2025) ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு அவர் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் மாவட்டம் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மெர்ஸி (கணவர் பெயர் : சாம்சன்) என்பவர் 20.3.2025 அன்று காலை 10.30 மணியளவில் பணியின் நிமித்தமாக திருவள்ளூர் நீதிமன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி சாலையில் எதிரில் வந்த நான்கு சக்கர கனரக வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி அன்று பிற்பகல் சுமார் 02.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவந்த எஸ். முத்தையா (வயது 40) என்பவர் 28.3.2025 அன்று காலை இருசக்கர வாகனத்தில் கூடன்குளம் அரசு மருத்துவமனை இரவு பாதுகாப்புப் பணி முடித்து கூடன்குளம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து, கூடன்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவஞானம் (வயது 41) என்பவர் 30.3.2025 அன்று தருமபுரியிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாள் பாதுகாப்புப் பணியை முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் தருமபுரி அரூர் மாநில நெடுஞ்சாலையில், தின்னப்பட்டி பிரிவு சாலை அருகே எதிர்பாராதவிதமாக வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ். ஆசிக் அகமது (வயது 39) என்பவர் கடந்த 30.3.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை, தின்னக்குளம் சந்திப்பு அருகில் நான்கு சக்கர வானத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காவலர் ஆசிக் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேற்காணும் சாலை விபத்துகளில் காவலர்கள் உயிரிழந்தார்கள் என்ற மிகத்துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சாலை விபத்துகளில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று தலைமைக் காவலர்களின் உயிரிழப்பு அவர்களது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு காவல்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.அதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.