நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் டெல்லியில் நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் (வீரர்கள்) பிரதமர் மோடி இன்று (13.04.2024) கலந்துரையாடினார். இந்தியாவில் கேமிங் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் 7 ஆன்லைன் கேமர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “கேமிங் துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.