மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (24-05-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், “70 ஆண்டுகளாக, பஞ்சாப் மக்கள் தொலைநோக்கிகள் மூலம் கர்தார்பூர் குருத்வாராவை மட்டுமே பார்க்க முடிந்தது. அது எல்லோருக்கும் அவமானமாக இருந்தது. பங்களாதேஷ் போர் முடிவடைந்த போது 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்து இந்தியாவின் சிறைகளில் இருந்தனர். எங்களிடம் பேரம் பேசும் சக்தி இருந்தது. அப்போது மோடி இருந்திருந்தால், நான் பாகிஸ்தானிடமிருந்து கர்தார்பூரைக் கைப்பற்றியிருப்பேன். அதன் பிறகுதான் அவர்களின் வீரர்களைத் திருப்பி அனுப்பியிருப்பேன். காங்கிரஸ் அதைச் செய்யவில்லை. அப்படிச் செய்ய முடியாததால், என்னால் இயன்ற அளவு குருக்களின் தேசத்திற்குச் சேவை செய்து, பக்தர்கள் பெருமையுடன் தரிசிக்கக் கூடிய கர்தார்பூர் நடைபாதையைத் திறந்து வைத்தேன்.
இந்தியக் கூட்டணியைப் பொறுத்தவரை, அவர்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்துவதே மிகப்பெரிய குறிக்கோள். பிரிவினையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மற்றும் சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு சி.ஏ.ஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையை வழங்கி வருகிறேன். இந்தியா கூட்டணியினர் சி.ஏ.ஏஐ எதிர்க்கிறார்கள். சி.ஏ.ஏ என்ற பெயரில் கலவரங்களை ஏற்பாடு செய்கின்றனர். இன்றும் அவர்கள் தங்கள் அரசாங்கம் வந்தால், சி.ஏ.ஏ ஐ ரத்து செய்வோம் என்று கூறுகிறார்கள். பிரிவினையால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது தவறா என்று சொல்லுங்கள்?
பஞ்சாபில், டெல்லியின் ‘கட்டார்’ ஊழல் கட்சியும், சீக்கிய கலவரத்தில் குற்றவாளியான மற்றொரு கட்சியும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிடுவது போல் நடிக்கின்றன. அவர்கள் எந்த அறிக்கையும் செய்யலாம். ஆனால் டெல்லியில் அவர்கள் ஒருவரையொருவர் தோளில் சுமந்துகொண்டு நடனமாடுகிறார்கள். அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு பஞ்சாப் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் குரு அன்னா ஹசாரேவுக்கு துரோகம் செய்யக்கூடியவர்கள் ஒரு நாளைக்கு 10 முறை பொய் சொல்லலாம். அப்படிப்பட்டவர்களால் பஞ்சாபை வளர்க்கவும் முடியாது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எதையும் விட்டுச் செல்லவும் முடியாது” என்று கூறினார்.