சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில் மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 16 ஓட்டுகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு கிடைத்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, பா.ஜ.க குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கடுமையாக விமர்சனம் செய்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த சூழலில் இன்று (02-02-24) விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார்.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை கண்டித்தும் டெல்லியில் பா.ஜ.க அலுவலகம் முன்பும், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் பலரை போலீஸ் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வந்தாலும், காவல்துறை மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.