2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள், மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 7 கட்டங்களாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (16-03-24) நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “மோடி என்றால் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் 2029இல் சிக்கிக்கொண்டீர்கள், ஆனால் நான் 2047க்கு திட்டமிடுகிறேன். இன்று மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடும் பணி தொடங்கியுள்ளது. முழு உலகமும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் என்பது நிச்சயம்.
இன்று தேசத்தின் மனநிலை, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பற்றியது. இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் நாடு உள்ளது. இதுபோன்ற மாநாட்டிற்கு நான் வரும்போதெல்லாம், நான் பல தலைப்புச் செய்திகளைத் தருவேன் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கும். ஆனால் நான் தலைப்புச் செய்திகளுக்காக வேலை செய்யவில்லை, காலக்கெடுவை மனதில் வைத்து வேலை செய்கிறேன்.” என்றார்.