Skip to main content

“காங்கிரஸ் 40 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” - பிரதமர் மோடி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
PM Modi says Congress cannot suppress my voice

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று முன் தினம் (05-02-24) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர்.

இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி இன்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்து பேசினார். அப்போது அவர், “ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் ஆற்றல், வலிமை மற்றும் பிரகாசமான எதிர்காலம் பற்றி பேசினார். நான், ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நன்றி கூறுகிறேன். 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸால் 40 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாது என்ற சவால் மேற்கு வங்கத்தில் இருந்து உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அந்த 40 தொகுதிகளாவது கிடைக்கட்டும் என பிரார்த்தனை செய்கிறேன். 

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டு, நாட்டில் பிரதமரின் குரல்களை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று நீங்கள், இந்த உரையை கேட்கக்கூடாது என்று தயாராக வந்துவிட்டீர்கள். ஆனால் உங்களால் என் குரலை அடக்க முடியாது. நாட்டு மக்கள் இந்தக் குரலுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். நானும் இந்த முறை தயாராக வந்துள்ளேன். மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் நீண்ட நேரம் பேசினார். நீண்ட நேரம் அவருக்கு எப்படி பேச வாய்ப்பு கிடைத்தது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான், இரண்டு சிறப்பு தளபதிகள் அங்கு இல்லை என்று நான் உணர்ந்தேன். அதனால் தான், அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். 

காங்கிரஸின் பேச்சை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கேட்கும் போது, அவர்களது சிந்தனை கூட காலாவதியாகிவிட்டது என்ற எனது நம்பிக்கை மேலும் வலுவடைகிறது. பல தசாப்தங்களாக நாட்டை ஆண்ட இவ்வளவு பெரிய கட்சி இவ்வளவு வீழ்ச்சியை கண்டுள்ளது. இதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. உங்களுக்கு எங்கள் அனுதாபங்கள். நமது நிலத்தின் பெரும்பகுதியை எதிரிகளிடம் ஒப்படைத்த காங்கிரஸ், நாட்டின் ராணுவத்தை நவீனப்படுத்துவதைத் தடுத்து நிறுத்திய காங்கிரஸ், இன்று தேசப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. 

PM Modi says Congress cannot suppress my voice

சுதந்திரத்திற்குப் பிறகு, தொழில் தேவையா அல்லது விவசாயம் வேண்டுமா என்ற குழப்பத்தில் இருக்கிறது காங்கிரஸ். தேசியமயமாக்கல் முக்கியமா அல்லது தனியார்மயமாக்கல் முக்கியமா என்பதை காங்கிரஸால் முடிவு செய்ய முடியவில்லை. 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தை 12வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு கொண்டு வந்த காங்கிரஸ், இந்தியாவின் பொருளாதாரத்தை வெறும் 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

ஓபிசி பிரிவினருக்கு காங்கிரஸ் முழுமையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை. தனது குடும்பத்திற்கு மட்டும் பாரத ரத்னா வழங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இப்போது சமூக நீதிக்கான பாடத்தை நமக்குப் போதிக்கிறார்கள். தலைவர் என்ற உத்தரவாதம் இல்லாதவர்கள் மோடியின் உத்தரவாதம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்