கேரளாவில் சபரிமலைக் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் அங்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள், பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டம் செய்தனர். போராட்டம் சபரிமலையில் வன்முறையாகவும் மாறியது. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநில மாநாட்டையொட்டி கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது: சபரிமலை தீர்ப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்கிறார். ஆனால் கேரளாவில் பாஜக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸை சேர்ந்த பலர் கொடிகள் பிடிக்காமல் பாஜகவுடன் கலந்து கொள்கின்றனர். இது வேதனை அளிக்கிறது.
சபரிமலை தீர்ப்பில் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு நேர்மாறாக செயல்படுகின்றனர். இந்த தீர்ப்பு முதலில் வெளியானபோது பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர்தான் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
காங்கிரஸ் மதவாத மோதல்களில் இருந்து பாடம் கற்கவில்லை. அந்த கட்சியிலிருந்து விலகி பலர் மதவாத சக்திகளுடன் கரம் கோர்த்ததை அக்கட்சி எண்ணி பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் ‘பி’ அணியாகவே கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. பாஜகவின் வலதுசாரி கொள்கைகளை பின்பற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான விலையை கொடுக்கும் சூழல் ஏற்படும் என்று பினராயி விஜயன் காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.