தேர்வறையில் கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட உதவி பேராசிரியரை பிடித்த மாணவர்கள் துரத்தித் துரத்தி சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் கரீம்நகர் மாவட்டம் தீமாப்பூரில் உள்ளது ஸ்ரீ சைதன்யா பொறியியல் கல்லூரி. அந்த கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றும் வெங்கடேசன் என்பவர் மாணவி ஒருவரிடம் தேர்வறையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
உதவி பேராசிரியரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த மாணவி சக மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் அந்தப் பேராசிரியரை நிற்கவைத்து கேள்வி கேட்டனர். ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பேராசிரியர் வெங்கடேஷ் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்து ஓட்டம் பிடித்தார். ஆனால் மாணவர்கள் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து சரமாரியாக அடித்தனர்.
கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட அந்த உதவி பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரீம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.