Skip to main content

"அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை" - பெகாசஸ் விசாரணையில் அவகாசம் கேட்ட மத்திய அரசு வழக்கறிஞர்!

Published on 07/09/2021 | Edited on 13/09/2021

 

supreme court

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்த விசாரணையின்போது பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என தெரிவித்த மத்திய அரசு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால், இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியதா இல்லையா என்பதைப் பொதுவெளியிலோ அல்லது பிரமாண பத்திரத்திலோ கூற முடியாது எனவும், உச்ச நீதிமன்றம் குழு அமைத்தால், அந்தக் குழுவின் முன் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க தயார் எனவும் தெரிவித்தது.

 

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில், பெகாசஸ் விவகாரம் இன்று (07.09.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெகாசஸ் வழக்கில் கூடுதல் பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், சில அதிகாரிகளை சந்திக்க முடியாததால் கூடுதல் பிரமாண பாத்திரத்தை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க  முடியவில்லை எனவும் இதுதொடர்பாக முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். 

 

இந்தக் கோரிக்கைக்குப் பத்திரிகையாளர்கள் என். ராம், சசி குமார் ஆகியோர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து, பெகாசஸ் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்