குடியுரிமைத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் "அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்; ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்"என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ப.சிதம்பரம், "இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என அரசு சொல்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி உண்மையை மறைக்கிறார்கள் அல்லது திரித்துப் பேசுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சட்டத்தைப் பற்றி அரசு பொய் சொல்கிறது. அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள்.
இந்தச் சட்டத்தைப் பற்றிப் பேசுபவர்கள் பல பேர், இந்தச் சட்டத்தைப் படித்ததே கிடையாது. அதனால்தான் துணிச்சலாகப் பொய் சொல்லமுடிகிறது. இதில் பெரிய பொய் என்னவென்றால், இந்த சட்டம் இந்தியாவில் உள்ளவர்களை பாதிக்காது என்பதுதான். பிறகு இச்சட்டம் ஆப்பிரிக்க நாட்டு மக்களையா பாதிக்கும்? இச்சட்டம் இந்தியாவில் இருப்பவர்களை பாதிக்காது என அமைச்சர்கள் சொல்வது முற்றிலும் பொய். தவறு என்றால் கூட மன்னிக்கலாம். ஆனால் பொய் சொன்னால் எப்படி மன்னிக்க முடியும்? தவறு வேறு, பொய் வேறு" என கூறினார்.