நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த திங்கள்கிழமை கூடியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று கரோனா பற்றி விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்பு அவை மீண்டும் கூடிய நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கொகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ் , உன்னிதன், பென்னி பெஹ்னன், குர்ஜித் சிங் ஆகியோரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அவை கூடியதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதைப் போலவே இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரண்டு அவைகளும் வரும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.