Skip to main content

பெண் மருத்துவர் படுகொலை; உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

Published on 20/08/2024 | Edited on 20/08/2024
Supreme Court orders report of investigation in Kolkata woman doctor case

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே அரசைக் கடுமையாகச் சாடிய மேற்கு வங்க உயர்நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா கொல்கத்தாவில் பேரணி நடத்தினார். இருப்பினும் மம்தாவிற்கு  எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது.  

இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை? சம்பவம் நடந்த உடனே நடவடிக்கை  எடுக்க வேண்டிய காவல்துறை மெத்தனமாக நடந்திருக்கிறது.  இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை” என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேசிய அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்