நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13ம் தேதி) துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைதினைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அதானி உள்ளிட்ட விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று துவங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகளைக் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்தில் பாஜக 35 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அதேபோல், நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை போன்ற பிரச்சனைகளை தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எழுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறி வைக்கப்பட்டு கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டில் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் இந்திய நாடாளுமன்றத்தையும் மக்களையும் இழிவு செய்துள்ளார். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் உள்ளது. இந்திய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேசலாம். அதனால், ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை இழிவு செய்துள்ளார். அவரது கருத்துக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என நான் கருதுகிறேன். அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பேசினார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
கூட்டத்தொடர் ஒத்திவைப்புக்கு பிறகு நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பேசுவதற்கு அனுமதியில்லை என லண்டனில் பேசியுள்ளார். இது மக்களவையை அவமானப்படுத்தக் கூடியது. இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.