
வகுப்பு பொதுத் தேர்வில் மகன் தோல்வியடைந்ததை பெற்றோர் இனிப்பு பரிமாறி கொண்டாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் சோழச்சகுடா. இவர் பசவேஷ்வர் ஆங்கில வழிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தார். சமீபத்தில், அந்த தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அபிஷேக் 600க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார்.
வழக்கமாக, மகன் தேர்வில் தோல்வியடைந்தால் பெற்றோர் திட்டியோ அல்லது அடித்தோ இருப்பார்கள். ஆனால், அபிஷேக் வீட்டில் அவரது பெற்றோர் அவருக்கு பக்கபலமாக இருந்து அவரை பாராட்டியுள்ளனர். மேலும், கேக் ஒன்றை ஆர்டர் செய்து அதை குடும்பமே சேர்ந்து வெட்டி இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது குறித்து அபிஷேக்கின் பெற்றோர் கூறுகையில், ‘மகன் தேர்வில் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் தோல்வியடையவில்லை. அவன் எப்போதும் மீண்டும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெறலாம்’ என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் ஆதரவால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த அபிஷேக் கூறியதாவது, ‘நான் தோல்வியடைந்தாலும், என் குடும்பத்தினர் என்னை ஊக்கப்படுத்தினர். நான் மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவேன்’ எனத் தெரிவித்தார்.