
வாட்ஸ்அப் குழுவில் துணை முதல்வர் ஆபாசப்படம் ஒன்றை அனுப்பிய விவகாரம் கோவா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவின் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து, நேற்று அதிகாலை 1.20 மணியளவில் 'VILLAGES OF GOA' எனும் குழுவில் ஆபாச வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அந்த குழுவில் இருந்தோர், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், இதுதொடர்பான செய்திகள் வெளியாகி அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, கோவா காங்கிரஸ் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடியோ பகிரப்பட்டபோது, தான் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், இது ஹேக்கர்களின் வேலை எனவும் துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் கூறியுள்ளார். அதேநேரம், துணை முதல்வரின் வாட்ஸ்அப்பில் இருந்து பகிரப்பட்ட இந்த ஆபாசப்படத்தால் அம்மாநில அரசியலில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.