Skip to main content

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Order to release 5 thousand cubic feet of water from Cauvery to Tamil Nadu

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் அமர்வில் கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், காவிரி நதி நீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். அதன்படி இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே. மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து நேற்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்ட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. அதே சமயம் 3 ஆயிரம் கன அடி மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர். அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்ட்டது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

 

இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு நேற்று பிறப்பித்திருந்த பரிந்துரையைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 அயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் இந்த உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்