நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரண்டு வாரங்களாக முடங்கிய நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை அன்று விலைவாசி உயர்வு தொடர்பான விவகாரம், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஜூலை 18- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால்,அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் வாரத்தின் கடைசி இரு தினங்களிலும் அவை நடவடிக்கை பாதித்தது. மறுபுறம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பெயரை பா.ஜ.க.வினர் வேண்டுமென்றே இழுப்பதாக அக்கட்சியின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக, சோனியா காந்தி குறித்த பேச்சுக்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியைப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அளவிற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசப்பட்டனர். இதனால் கடந்த இரு வாரங்களாக எந்த அலுவல்களும் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.
இந்த சூழலில், கரோனாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து நாடாளுமன்றம் வரத் தொடங்கி இருப்பதால், வரும் திங்கள்கிழமை அன்று விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றபடி, அரசும் விவாதத்தை உடனடியாக நடத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் அறிவித்துள்ளார்.
மக்களவையில் விவாதம் முடிந்ததும், மறுநாளே செவ்வாய்கிழமை அன்று மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடத்தப்படும் என தெரிகிறது.