மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லியில் 14 வது நாளாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து, விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறப்படவேண்டும் என வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பில், ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு எதிரான இச்சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, ஜனநாயகமற்ற முறையில், கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களும், மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படவேண்டும் எனக் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார்.
தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், வேளாண்மை மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் எனவும், வேளாண்மை மசோதா, பாராளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், அத்தனை கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு, மசோதா வேகமாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தக் குளிரில் போராடும் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது, அரசின் கடமை எனத் தெரிவித்தார்.