Skip to main content

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல்?

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Women reservation bill filed today

 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று முதல் (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.

 

அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த மசோதா நிலுவையிலேயே உள்ளது. இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்து மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மசோதா மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை மறுநாள் இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” - முதல்வர்

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Right of expression issue in Parliament 

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை பெரியாரின் பெயர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை பெரியாரின் பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக் காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி. சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவியிலிருந்து நீக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mahua Moitra MP Dismissal

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நன்னடத்தை குழுவின் பரிந்துரை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கொள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இதனைத் தொடர்ந்து மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி.பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார்.