![Opinion against Prime Minister Modi; Election Commission notice to Rahul Gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/xuBaiFoA2SyJo4Y4sJ90jHwND90rtVx6HmWtn5rWWEo/1700739884/sites/default/files/inline-images/rahul-gandhi-elec-ni.jpg)
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசிய போது, ”பிரதமர் மோடி டி.வியில் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் குறித்து பேசுவார். ஆனால், சில நேரங்களில் திடீரென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்காக அவர் சென்றுவிடுவார். நமது கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தின் முன்னோடி அவர்களை தோற்கடித்து விட்டார்” என்று மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
அதே போல், நேற்று (22-11-23) நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அப்படி அவர்கள் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது. அதனால், அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் வருவார்கள். ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்து கொண்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர்.
அது மாதிரி, மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. அவர் தொலைக்காட்சி முன் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் பிரச்சனை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார். இருவருக்கும் இடையே யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்தான் அமித்ஷா. அப்படி யாராவது வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார்” என்று பேசினார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீதும், ராகுல் காந்தி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.