டெல்லியில் பள்ளி மாணவி மீது 20 வயது இளைஞர் ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உத்தம் நகர் பகுதியில் நேற்று (14.12.2022) காலை 7.30 மணியளவில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே எதிரில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த இருவர் மாணவியின் மீது ஆசிட் வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
ஆசிட் வீச்சால் முகம், கண் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு வலி தாங்காமல் துடித்த மாணவியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி மீது ஆசிட் வீசப்பட்டதை அறிந்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது 20 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. சச்சின் அரோரா என்ற இளைஞரும் மாணவியும் காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாணவி மூன்று மாதங்களாகப் பேசவில்லை என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த சச்சின் மாணவியின் மீது ஆசிட் வீச்சில் ஈடுபட்டதாகவும் கண்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்தனர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.